அனிமல் 2ம் பாகத்திற்கு அனிமல் பார்க் டைட்டில் ஏன் ? ; சந்தீப் ரெட்டி வங்கா தகவல்
கடந்த 2023ல் பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். தற்போது அவர் பிரபாஸை வைத்து 'ஸ்பிரிட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் என்றும் இதற்கு 'அனிமல் பார்க்' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் சமீபத்தில் ஜப்பானில் அனிமல் பட சிறப்பு காட்சி திரையிடலில் கலந்து கொண்ட சந்தீப் ரெட்டி வங்கா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கூறும்போது, “இந்த படம் 2027 ஜூன் மாதத்திற்கு மேல் துவங்க இருக்கிறது. இந்த படத்திற்கு ஏன் அனிமல் பார்க் என டைட்டில் வைத்திருக்கிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள். இந்த படத்தில் ஒரு அனிமல் இல்லை.. இரண்டு அனிமல் இருக்கின்றன.. ஆம் இந்த படத்தில் ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதனால் தான் அதற்கு பொருத்தமாக அனிமல் பார்க் என டைட்டில் வைத்தேன்” என்று கூறியுள்ளார்.