ஜூனியர் என்டிஆரின் 'டிராகன்' படத்தில் நடிக்கவில்லை ; டொவினோ தாமஸ் விளக்கம்
மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'பள்ளிச்சட்டம்பி' படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'ஜன கன மன' படத்தை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்த படத்தை இயக்கியுள்ளார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இன்னொரு பக்கம் நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது பிரசாந்த் நீல் டைரக்ஷனில் நடிக்கும் 'டிராகன்' படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடிக்க இருக்கிறார் என்றும் இதன் மூலம் அவர் தெலுங்கிலும் அடி எடுத்து வைக்கிறார் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. தற்போது பள்ளிச்சட்டம்பி படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, தான் டிராகன் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது, அதே சமயம் அவர்கள் கேட்ட தேதிகள் என் கைவசம் இல்லை என்பதால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்பதையும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.