ஹாய் : நயன்தாராவுக்காக எழுதப்பட்ட கதை
லோஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விஷ்ணு எடவன். இப்போது நயன்தாரா, கவின் கூட்டணியில் 'ஹாய்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாக்யராஜ் , ராதிகா, பிரபு, சத்யன், குரேஷி, ஆதித்யா கதிர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் லலித்குமார் , ஜீ ஸ்டூடியோவுடன் இணைந்து நயன்தாரா தயாரித்துள்ளார்.
படம் குறித்து விஷ்ணு எடவன் கூறி இருப்பதாவது : எனக்கு பீல்குட் ஜானர்கள் ரொம்பப் பிடிக்கும். 'யாரடி நீ மோகினி', 'சந்தோஷ் சுப்ரமணியம்' மாதிரி படங்கள் பண்ணணும்னு விரும்பினேன். இந்தப் படமும் அந்த மாதிரியான ஒன்றுதான்.
இந்த படத்தின் கதையை நயன்தாராவை மனதில் வைத்து தான் எழுதினேன். கதையைக் கேட்ட உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். அதோடு தலைப்பை எளிதாக வைக்கச் சொன்னார். அவருடைய ஆலோசனையின் பேரிலேயே 'ஹாய்' தலைப்பு உருவானது. அதோடு இந்தச் சொல்லுக்கு கதையோடு நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது ஒரு இடத்திலாவது ஹாய் சொல்லாமல் அந்த நாளை கடந்து செல்ல முடியாது. அப்படி ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிகவும் தொடர்புடைய ஒரு சொல் இது.
நயன்தாராவுக்கு ஜோடியாக கவினா என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் உண்மையில் இந்த படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது, ஆனாலும் நயன்தாரா - கவின் காதல் தான் படத்தில் மையமாக இருக்கும்.
பொதுவாக நயன்தாராவுக்கு ஜோடி என்றால் பெரிய முன்னணி நட்சத்திரங்களை தான் நாம் யோசிப்போம். ஆனால் இதில் சற்று வித்தியாசமாக புது முகமாகவும் இருக்க வேண்டும். அதேநேரத்தில் அனைவருக்கும் அறிந்து முகமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினோம் அப்படி வந்து சேர்ந்தவர் தான் கவின்.
'ஷாலினி மாதிரி பெண் வேண்டும் என்று எல்லா ஆண்களும் நினைக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் அஜித்தாக இருக்க வேண்டுமே'. இதுதான் கதையின் ஒன் லைன்.
ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கும் நாயகன் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். இவர்தான் தன் மனைவியாக வரவேண்டும் என்று முடிவு செய்கிறான் அதற்கு அவன் தன்னை எப்படி தயார் செய்கிறான் என்பதை பற்றிய கதை. என்றார்.