கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை
'பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகான், ரெட்ரோ' ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தன் ஒவ்வொரு படங்களிலும் தனக்கென தனி முத்திரை பிரதிபலிக்கும் வகையில் படமாக்குவதில் சிறப்பு பெற்றவர். இவர் இயக்கிய 9 படங்களில் பேட்ட (அனிருத்) தவிர மற்ற எட்டு படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ஆனாலும் தன் படங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் தான் இயக்கும் 10வது படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான சீக்யா எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து படம் இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ், முதன் முறையாக இளையராஜாவை தன் படத்திற்கு இசையமைக்க வைத்துள்ளார்.
இது தொடர்பாக 'கனவு 10 ஆசீர்வாதம் 1540' எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதாவது, கார்த்திக் சுப்பராஜின் 10வது படம், இளையராஜாவின் 1540வது படம் என குறிப்பிட்டுள்ளார். படத்தின் தலைப்பு உள்ளிட்ட மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.