''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள்
டி.ராஜேந்தரால் 'மோனிஷா என் மோனாலிசா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மும்தாஜ். அதன் பிறகு 'குஷி', 'சாக்லேட்', 'லண்டன்' உள்பட பல படங்களில் நடித்தார். நாயகி வாய்ப்புகள் குறையவே கவர்ச்சி வேடங்களிலும் நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஆன்மிக விஷயங்களில் நாட்டம் காட்டினார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அவர் இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான ஹஜ் கடமையை முடித்து முழுமையான இஸ்லாமிய பெண்ணாக மாறினார்.
இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு மும்தாஜ் அளித்த பேட்டி ஒன்றில் பெண்களின் உடை, சமூக பார்வை மற்றும் சினிமா துறையில் சந்தித்த பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: ஒரு பெண் மிகவும் கவர்ச்சியான உடையில் வெளியே வந்தால், ஆண்கள் அந்த பெண்ணை காலில் இருந்து தலை வரை பார்ப்பார்கள், அவர்களின் பார்வை வேறுவிதமாக இருக்கும். ஆனால், அபாயா அணிந்து வந்தால் அந்த பெண்ணை மரியாதையுடன் பார்ப்பார்கள். நான் ஷார்ட் டிரெஸ் போட்டுக்கொண்டு தெருவில் ஆடி இருக்கிறேன். இப்போது 'அபாயா' அணிந்தும் வெளியில் செல்கிறேன். இந்த இரண்டு பார்வைகளுக்கும் இருக்கும் வேறுபாடு என்ன என்பதை என்னால் உணரமுடிகிறது.
நான் ஒரு நடிகையாக இருந்தபோது, என்னுடைய வாழ்க்கையும், கேரியரும் இயக்குனர்கள் கையில் தான் இருந்தது. ஒரு உடையை என்னிடம் காட்டுவார்கள், அதே உடை படப்பிடிப்பு சமயத்தில் இன்னும் சிறியதாகி இருக்கும், என்ன சார் ஏன் இவ்வளவு சிறிய உடை என்று கேட்டால், இயக்குனர் தான் குறைக்க சொன்னார் என்று சொல்வார்கள். இயக்குனரும், கிளாமர் பாடலுக்கு இப்படி உடை இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்பார்.
ஒரு நடிகையாக இயக்குனரின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை தான் உண்மையான ஒடுக்குமுறை. இன்று அந்த வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியாக வாழ்கிறேன். இவ்வாறு மும்தாஜ் பேசியது தற்போது வைரலாகியுள்ளது.