உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உள்ளூர் மருத்துவரை நம்பியதால் என் சித்தியை இழந்தேன் ; நடிகை அஞ்சு அரவிந்த் வேதனை

உள்ளூர் மருத்துவரை நம்பியதால் என் சித்தியை இழந்தேன் ; நடிகை அஞ்சு அரவிந்த் வேதனை


நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த 'பூவே உனக்காக' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சு அரவிந்த். அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் 'ஒன்ஸ்மோர்' படத்தில் நடித்தவர், மேலும் பல தமிழ் படங்களிலும் நடித்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது சித்தியான ராஜ் என்பவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள அஞ்சு அரவிந்த் உள்ளூர் மருத்துவரின் கவனக்குறைவாலேயே தனது சித்தியை இழந்ததாக தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் எனது சித்தி ராஜ் தான் எனக்கு உறுதுணையாக இருந்தார். எனக்கு நடன அரங்கேற்றம் செய்யும்போது புதிதாக உடை வாங்க பொருளாதார வசதி இல்லாத சமயத்தில் அவரது பட்டுப் புடவையை கொடுத்து அதில் உடை தைத்து அதை அணிந்து தான் எனது நடன அரங்கேற்றம் நடைபெற்றது. நான் சினிமாவில் நுழைவதற்கும் இப்போது பொருளாதார ரீதியாக தனித்து நிற்பதற்கும் அவர்தான் காரணமாக இருந்தார்.

அவருக்கு ஆரம்பத்தில் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்ட போது உள்ளூர் மருத்துவரிடம் காட்டினோம். அவர் அப்போதெல்லாம் அது வெறும் வாயு தொல்லை தான் என்று கூறி சாதாரண மருந்துகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வந்துள்ளார். பலமுறை இதேபோல அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் நோயும் தீவிரம் அடைந்தது. ஒரு கட்டத்தில் மிகப்பெரிய மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது தான் அவருக்கு புற்றுநோய் நான்காம் கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. ஆரம்பத்திலேயே அந்த மருத்துவர் ஒரு ஸ்கேன் செய்து பாருங்கள் என பரிந்துரைத்து இருந்தால் இன்று என் சித்தியை இழந்திருக்க மாட்டேன். டாக்டர்கள் நோயாளிகளை இவ்வளவு அலட்சியமாக கையாளக் கூடாது” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் அஞ்சு அரவிந்த்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !