ஜெனரேட்டர் வேனுக்குள் உடை மாற்றினார் ; ரவீணா டாண்டனை பாராட்டிய அக்ஷய் குமார்
ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'வெல்கம் டு தி ஜங்கிள்'. இந்த படத்தில் இவருடன் நடிகை ரவீணா டாண்டன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக 90களில் 'மொஹ்ரா, கிலாடியோன் கி கிலாடி' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து ஜோடியாக நடித்த அக்ஷய் குமார் - ரவீனா டண்டன் ஜோடி 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். வரும் ஜூன் 26ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் புரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அக்ஷய் குமார் ரவீணா டாண்டன் குறித்து கூறும்போது, “ஒரு முறை நாங்கள் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது சூரியன் மறைவதற்கு முன்பாக சில காட்சிகளை எடுக்க நினைத்தோம். 20 நிமிடங்கள் தான் எங்கள் கையில் இருந்தது. ஆனால் ரவீணா டாண்டன் ரொம்ப தூரம் தள்ளி நிறுத்தப்பட்டிருக்கும் கேரவனுக்கு சென்று ஆடை மாற்றிக் வந்தால் அந்த காட்சியை எடுக்க முடியாமல் போய்விடும் சூழல் இருந்தது. அதனால் சற்றும் தயங்காத ரவீணா டாண்டன் படப்பிடிப்பு தளத்திலேயே இருந்த ஜெனரேட்டர் வேனுக்குள் சென்று ஆடை மாற்றி வந்து அந்த காட்சியில் நடித்து முடித்தார். சினிமா மீதான அர்ப்பணிப்பு உணர்வும் தயாரிப்பாளர்களுக்கு எவ்வித கஷ்டமும் கொடுக்கக் கூடாது என்கிற எண்ணமும் அவரிடம் அப்போது மட்டுமல்ல இப்போதும் இருக்கிறது” என்று பாராட்டியுள்ளார்.