உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வெள்ளி விழா ஆண்டில் வெள்ளி விழா படம் கொடுத்த ஆர்.எம்.வீரப்பன்

பிளாஷ்பேக்: வெள்ளி விழா ஆண்டில் வெள்ளி விழா படம் கொடுத்த ஆர்.எம்.வீரப்பன்

மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களை தயாரிப்பதற்கென்று ஆர்.எம்.வீரப்பன் தொடங்கிய நிறுவனம் சத்யா முவீஸ். இந்த நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டில் ஒரு பக்கவான வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார் ஆர்.எம்.வீரப்பன். படத்தின் நாயகன் ரஜினி என்று முடிவானது. பல கதைகளை கேட்டும் ஆர்.எம்.வீரப்பனுக்கு திருப்தி தரவில்லை. வெள்ளி விழா ஆண்டு படம் தோல்வி அடைந்து விட்டால் அது மாறாத வடுவை ஏற்படுத்தும் என்று கருதினார்.

இந்த நிலையில் அவர் 'லாவாரிஸ்' என்ற ஹிந்தி படத்தை பார்க்க நேர்ந்தது. அமிதாப்பச்சன், ஜீனத் அமன், அம்ஜத்கான் ஆகியோர் நடித்த வெற்றிப் படம் இது. பிரகாஷ் மெஹ்ரா தயாரித்து இயக்கி இருந்தார். இந்த படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்கி அதனை பி.வாசு கையில் கொடுத்து அதனை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றச் சொன்னார். அவரும் அந்த படத்தில் இருந்த ஏராளமான கேரக்டர்களை நீக்கி விட்டு புதிதாக சில கேரக்டர்களை சேர்த்து 'பணக்காரன்' திரைக்கதையை எழுதினார்.

ரஜினிகாந்துடன், கவுதமி, விஜயகுமார், சுமித்ரா, சத்யபிரியா, ராதாரவி, சரண்ராஜ் செந்தாமரை, சந்தானபாரதி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். அத்தனை பாடல்களும் ஹிட்டானது. குறிப்பாக 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணுந்தான்' என்ற பாடல் திருமண விழா பாடலானது. 1990ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இந்த படம் 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !