டாஸ்மாக் கடைகளை அதிகமாக திறக்க வேண்டும் : கஞ்சா கருப்பு சர்ச்சை பேச்சு
வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வந்த ரவிமரியா கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'மக்கள் தலைவா'. அவருடன் ராதாரவி, அக்சரா விஜய், பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், பேரரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவிமரியாவின் உதவியாளர் ராம்தேவ் இயக்கி உள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கஞ்சா கருப்பு பேசுகையில், இந்தப் படத்தின் இயக்குநர் ராம்தேவுக்கு ஒரு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்குத் போன் செய்து பேசுவார். ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பிற்கு வரச் சொன்னார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன ஒயின் ஷாப்பிற்குச் சென்றேன். கதவு மூடி இருந்தது. யாரும் அங்கு வரவில்லை.
நான் சென்று கடை கதவைத் தட்டியதும் உள்ளே இருந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் இன்று பிளாக்கில் சரக்கு கிடைக்காது என்றார். அவரிடம், 'நான் சரக்கு வாங்க வரவில்லை. நடிக்க வந்திருக்கிறேன். இயக்குநர் இங்குதான் வரச் சொன்னார்' என்றேன். அதன் பிறகு புரொடக்ஷன் நபர் எனக்குப் போன் செய்து வந்துவிடுகிறேன் என்றார்.
இன்னொரு முக்கியமான விஷயம், தற்போது இரவு 9:45 மணிக்கே கடைகளை முழுமையாக மூடிவிடுகிறார்கள். இந்த ஆட்சியில் மதுக்கடைகளை இரவு 12 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதேபோல் காலையில் 7 மணிக்கே திறந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். ஒயின் ஷாப்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. எனவே, கடைகளின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும் என்றார்.
குற்றம் சம்பவங்களுக்கு மது, போதை போன்ற விஷயங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ள சூழலில் மதுக்கடைகளை அரசு குறைத்து வருகிறது. மதுபானக் கடைகளை மூட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் மதுபானக் கடைகளை அதிகப்படுத்த வேண்டும், காலையில் சீக்கிரமே திறக்க வேண்டும், இரவு லேட்டாக மூட வேண்டும் என்று கஞ்சா கருப்பு பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.