பிளாஷ்பேக் : பழம்பெரும் நடிகை அம்பிகாவைத் தெரியுமா?
அம்பிகா என்றதும் நினைவுக்கு வருவது ராதாவின் சகோதரியை தான். 'அந்த 7 நாட்கள்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர். 80களின் கனவு கன்னியாக இருந்தவர் என்றே மனதில் தோன்றும். ஆனால் அவருக்கு முன்பே ஒரு அம்பிகா இருந்தார். இவர் 1950 மற்றும் 1960-களில் மலையாளத் திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருந்தார். இவர் 'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்று அழைக்கப்படும் லலிதா, பத்மினி மற்றும் ராகினி ஆகியோருக்கும், மேலும் ஷோபனா, வினீத், கிருஷ்ணா மற்றும் சுகுமாரி ஆகியோருக்கும் நெருங்கிய உறவினர் ஆவார். பழம்பெரும் ஓவியர் ராஜா ரவிவர்மனின் பேத்தி.
1952ல் 'விசப்பின்ட விளி' படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், நடிகர் பிரேம் நசீரின் முதல் கதாநாயகியும் இவரே ஆவார். மலையாளத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 'பொன்னி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரம்பையின் காதல், ராஜாராணி, மாதர்குல மாணிக்கம், யானை வளர்த்த வானம்பாடி, ரத்னபுரி இளவரசி, இவன் அவனேதான், ஸ்ரீவள்ளி, நான் வணங்கும் தெய்வம், கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நடிப்பிற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலான அம்பிகா அங்கு நடனப் பள்ளியை நடத்தினார்.