உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜென்டில்மேனுக்கு வயது 33 : முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?

ஜென்டில்மேனுக்கு வயது 33 : முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?

இயக்குனர் ஷங்கரின் முதல் படம் ஜென்டில்மேன் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த படம் 1993ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வெளியானது. ஆம், இன்று ஜென்டில்மேனுக்கு வயது 33. அந்த வகையில் ஷங்கர் இயக்குனராக அறிமுகமாகி 33 ஆண்டுகள் ஆகிறது.

கும்பகோணத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஷங்கர், டிஎம்இ படித்துவிட்டு நடிகராக ஆசைப்பட்டார். நாடகங்களை நடத்தினார். சிவாஜி பட ரசிகையான அவர் அம்மா, சிவாஜி பட கேரக்டர் பாதிப்பில் அவருக்கு ஷங்கர் என பெயர் வைத்து இருக்கிறார். ஆனால், அவர் சூழ்நிலை காரணமாக இயக்குனர் எஸ்.ஏ.சியிடம் உதவியாளராக பணியாற்றினார். சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்தார்.

* இயக்குனர் பவித்ரனிடம் வசந்தகால பறவைகள், சூரியன் படங்களில் கோ டைரக்டராக பணியாற்றினார். அந்த படங்களை கே.டி.குஞ்சுமோன் தயாரித்தார். அப்போது சரத்குமாரை வைத்து ஐ லவ் இந்தியா படத்தை பிரமாண்டமாக எடுக்க நினைத்தார் பவித்ரன். அது குஞ்சுமோனுக்கு பிடிக்கவில்லை.

* கேடிகுஞ்சுமோகன், சரத்குமார், பவித்ரன் கூட்டணி உடைந்தது. விஷால் அப்பாவான ஜி.கே.ரெட்டி அந்த படத்தை தயாரித்தார். அந்த கோபத்தில் இருந்த கே.டி.குஞ்சுமோனிடம் ஷங்கர் வைத்திருக்கும் கதை குறித்து எடிட்டர் வி.டி.விஜயன், ஸ்டில் போட்டோகிராபர் ஸ்டில் ரவி ஆகியோர் சிபாரிசு செய்ய, சில திருத்தங்களுடன் அந்த கதையை தயாரிக்க ஓகே சொன்னார் குஞ்சுமோன்.

* முதலில் அந்த கதையில் சரத்குமார் நடிக்க வேண்டும் என்று ஷங்கர் ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை. இதுதாண்டா போலீஸ் ராஜசேகரிடமும் பேசப்பட்டது. கடைசியில் அர்ஜூனிடம் போய் கதை சொல்ல, அவரோ கிளைமாக்ஸ் தன்னை சுற்றி இல்லையே என்று பீல் பண்ண, கடைசியில் குஞ்சுமோன் பிடிவாதம் காரணமாக அப்படி இருக்க ஓகே சொன்னார். கமலையும் இந்த கதைக்காக ஷங்கர் அணுகினார். அவரும் ஓகே சொல்லவில்லை என்றும் தகவல். அர்ஜூனும் முதலில் கதை கேட்கவில்லை. பலகட்ட வற்புறுத்தலுக்கு பின்னரே கதை கேட்டு ஓகே சொல்லியிருக்கிறாராம்.

* ஜென்டில்மேன் படத்திற்கு முதலில் இளையராஜா இசையமைக்கலாம் என பேசப்பட்டதாம். ஆனால், ஷங்கரால் அவரை அணுக முடியவில்லை. இளையராஜா மீதான பயத்தில் முதல் படம் என்பதால் ஏ.ஆர்.ரஹ்மான் பக்கம் சென்றிருக்கிறார் ஷங்கர். அந்த கூட்டணியே பல ஆண்டுகள் தொடர்ந்தது.

* ஜென்டில்மேன் படத்தின் கதை பணக்காரர்களிடம் இருந்து ஏழைகளுக்கு உதவும் ராபின்ஹூட் கேரக்டர் தாக்கத்தில் உருவானது. அதை கல்வி, அரசியல், பகலில் ஒருத்தன், இரவில் ஒருத்தன் என மாற்றி, கவுண்டமணி, செந்தில் காமெடி, பாடல்கள் சேர்த்து கமர்ஷியல் ஆக்கினார் ஷங்கர். அர்ஜூனின் சேவகன் படம் பார்த்துவிட்டுதான் ஜென்டில்மேன் கிச்சா ரோலில் நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறார் ஷங்கர். அதேபோல் ரோஜா பார்த்துவிட்டு ஹீரோயினாக மதுபாலாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். பாடல் காட்சிகள் குற்றாலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

* ஜென்டில்மேன் பட சைக்கிள் பாம் கிளைமாக்ஸ், இலங்கையில் நடந்த ஒரு பிரபல அரசியல் தலைவர் படுகொலை ஒரு நிஜ சம்பவ பாதிப்பாம். ஜென்டில்மேன் படத்தை பார்த்த சில வினியோகஸ்தர்கள் டப்பிங் படம் மாதிரி இருக்கிறது என கமென்ட் அடிக்க, தனது பாணியில் சிறப்பாக விளம்பரம் செய்து இருக்கிறார் குஞ்சுமோன். படம் வெள்ளி விழா கண்டது

* ஜூகுனு, குரு, கருப்புபணம் உட்பட சில படங்களின் கலவை தான் ஜென்டில்மேன் என்று சிலர் விமர்சனம் செய்தனர். ஆனால், படம் ஹிட்டாக, படத்தில் பணியாற்றி உதவி இயக்குனர்களுக்கு ஸ்கூட்டர், இயக்குனர் ஷங்கருக்கு கார், ஒரு பிளாட், அடுத்த பட வாய்ப்பை பரிசளித்தார் தயாரிப்பாளர் குஞ்சுமோன்

* இன்று இயக்குனர்களாக இருக்கும் காந்தி கிருஷ்ணா, வசந்தபாலன் ஆகியோர் அந்த டிஸ்கசனில் இருந்து இருக்கிறார்கள். தாய் இறந்தபோது அவர் தாலியை மோதிரமாக போடும் தங்கள் குடும்ப வழக்கத்தை பிளாஷ்பேக்கில் சேர்ந்து இருக்கிறார் காந்தி கிருஷ்ணா, கல்வி உதவித்தொகை, கல்வி பற்றிய சீன்களுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார் வசந்தபாலன்.

* ஜென்டில்மேன் படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால், 12 தனியார் விருதுகளை வென்றது. ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. அங்கே மகேஷ்பட் இயக்க, சிரஞ்சீவி, ஜூஹி சாவ்லா நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மானின் 3 பாடல்கள் அங்கே அப்படியே பயன்படுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !