மகளைத் தொடர்ந்து தந்தையின் படத்தையும் இயக்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்
கடந்த 2018ல் கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்பை மையப்படுத்தி மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் '2018'. இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து, தற்போது மோகன்லாலின் மகள் விஸ்மயாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி 'தொடக்கம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். வரும் ஓணம் பண்டிகைக்கு இது வெளியாக இருக்கிறது. இதில் மோகன்லாலும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், மோகன்லால் இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவரை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு ஒரு முழுநீள திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை. அந்த விருப்பம் விரைவில் நிறைவேறும். 'தொடக்கம்' படத்தின் படப்பிடிப்பின்போதே அந்த கதையைக் கூறி இயக்க வாய்ப்பு கேட்டேன். அந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டது. அந்த வகையில் என்னுடைய அந்த ஆசையும் விரைவில் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.