'கருப்பு' வசூலைக் கடந்ததா 'ஜனநாயகன்' வசூல் ?
2026ம் ஆண்டில் இதுவரையில் வெளியான 100க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் சூர்யா நடித்து வெளியான 'கருப்பு' திரைப்படம் 340 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து முதலிடத்தில் இருக்கிறது.
அந்த வசூலை தற்போது 'ஜனநாயகன்' படம் கடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். 'கருப்பு' படத்தின் வசூல் அந்தத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்த ஒன்று.
ஆனால், 'ஜனநாயகன்' படத்தின் வசூல் பற்றி இதுவரையிலும் அதன் தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் படம் பற்றிய வசூல் நிலவரங்களை ரசிகர்கள், சில இணையதளங்கள் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றன.
'ஜனநாயகன்' படம் 350 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மட்டும் 225 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 125 கோடி வசூலையும் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
படம் வெளியாகி 10 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இதற்கு மேலும் தயாரிப்பு நிறுவனம் படத்தின் வசூலைப் பற்றி எந்தத் தகவலையும் வெளியிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. படத்தை வாங்கியவர்களுக்கு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் படம் வெற்றி என்றோ அதிரடி வசூல் என்றோ எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.