உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படம் முழுவதும் ஒரே ஒருவர் மட்டும் தான்... சினிமாவின் போக்கையே மாற்றிய படங்கள்

படம் முழுவதும் ஒரே ஒருவர் மட்டும் தான்... சினிமாவின் போக்கையே மாற்றிய படங்கள்


ஒரு சினிமா என்றால் ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன், துணை நடிகர்கள், நடிகைகள் என ஏராளமானவர்கள் திரையில் வந்து போவார்கள். ஆனால் ஒரே ஒரு நடிகர் அல்லது நடிகை மட்டுமே முழுத் திரைப்படத்தையும் தாங்கிப் பிடித்து நடிக்கும் சினிமா பாணி மிகவும் சவாலானது. பிற கதாபாத்திரங்களின் உதவி இல்லாமல், பார்வையாளர்களின் கவனத்தை முழுப் படத்திலும் ஒரே நபர் தக்கவைத்துக் கொள்வது திரைக்கதையின் வலிமையையும் நடிகரின் திறமையையும் காட்டுகிறது. இத்தகைய தனித்துவமான சில உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களின் விரிவான விவரங்கள் இதோ...

யாதேன் (Yaadein - 1964)
உலக அளவில் ஒரே ஒரு நபர் மட்டுமே நடித்த முதல் திரைப்படம் என்ற பெருமையை இந்தித் திரைப்படமான 'யாதேன்' பெற்றது. சுனில் தத் இயக்கி நடித்த இத்திரைப்படம் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது. வேலை முடிந்து வீடு திரும்பும் கதாநாயகன், தன் மனைவியும் குழந்தைகளும் வீட்டை விட்டுச் சென்றுவிட்டதை அறிந்து அதிர்ச்சியடைகிறான். காலியான வீட்டில் தனியாக இருக்கும் அவன், தன் கடந்த கால நினைவுகளையும் தவறுகளையும் எண்ணிப் பார்ப்பதே இதன் கதைக் களம். பிற கதாபாத்திரங்களின் நிழல்கள் மட்டுமே சுவரில் தெரியுமே தவிர, திரை முழுவதும் சுனில் தத் மட்டுமே தோன்றியிருப்பார்.

ஒத்த செருப்பு சைஸ் 7 (2019)
தமிழ் சினிமாவில் ஒரே நபரை வைத்து இயக்கி, நடித்து மிகப்பெரிய புரட்சியைச் செய்தவர் ஆர்.பார்த்திபன். காவல் நிலையத்தில் நடக்கும் ஒரு கொலை வழக்கின் விசாரணையில் மாசி என்பவன் தனியாக நின்று வாக்குமூலம் அளிப்பதே இதன் மையக்கதை. காவல் அதிகாரிகள், வழக்கறிஞர், பொதுமக்கள் என அனைவரின் குரல்களும் ஒலி வடிவில் மட்டுமே கேட்கும்; ஆனால் திரையில் மாசியாக பார்த்திபன் மட்டுமே தோன்றுவார். குரல் பதிவுகள் மற்றும் ஒலி வடிவமைப்பு (Sound Design) மூலமாகவே ஒரு முழு கதையையும் பார்வையாளர்கள் கண்முன்னே கொண்டு வந்து தேசிய விருது உட்பட பல சர்வதேச விருதுகளை வென்றது.

பரிட் (Buried - 2010) :
இயக்குநர் ரோட்ரிகோ கோர்ட்டேஸ் இயக்கத்தில் ரைன் ரேனால்ட்ஸ் நடித்த இத்திரைப்படம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. ஈராக்கில் பணியாற்றும் ஒரு அமெரிக்க லாரி ஓட்டுநர், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு ஒரு மரப்பெட்டிக்குள் உயிருடன் புதைக்கப்படுகிறார். படம் தொடங்குவது முதல் முடியும் வரை காட்சி அமைப்பு அந்த மரப்பெட்டிக்குள்ளேயே தான் இருக்கும். அவரிடம் இருக்கும் ஒரு லைட்டர், ஒரு கத்தி மற்றும் அரைகுறை சார்ஜ் உள்ள மொபைல் போனை வைத்துக்கொண்டு அவர் தப்பிக்க நடத்தும் போராட்டங்கள் பார்வையாளர்களை உரைய வைக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கும்.

127 ஹவர்ஸ் (127 Hours - 2010)
ஆரன் ரால்ஸ்டன் என்ற மலையேற்ற வீரரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு டானி பாயல் இயக்கத்தில் ஜேம்ஸ் பிரான்கோ நடித்த படம். உட்டா பள்ளத்தாக்கில் தனியாக மலையேற்றம் செல்லும் போது, திடீரென நழுவி விழும் ஒரு பெரிய பாறைக்கும் மலைக்கும் இடையே கதாநாயகனின் கை சிக்கிக் கொள்கிறது. உணவு, தண்ணீர் இல்லாமல் 5 நாட்கள் பாறைக்கு இடையே மாட்டிக்கொள்ளும் அவர், உயிர் பிழைக்க எடுக்கும் தீவிரமான முடிவே இதன் கதை.

லாக்கே (Locke - 2013)
ஸ்டீவன் நைட் இயக்கத்தில் டாம் ஹார்டி நடித்த இத்திரைப்படம் முழுவதும் ஒரு கார் பயணத்திலேயே நடக்கிறது. ஒரு கட்டுமானப் பொறியாளரான கதாநாயகன், தன் வாழ்வின் மிக முக்கியமான தொழில் மற்றும் தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க ஒரே இரவில் காரில் பயணிக்கிறார். அந்தப் பயணம் முழுவதும் கார் ஓட்டிக்கொண்டே ஸ்பீக்கர் போனில் அவர் பேசும் உரையாடல்கள் வழியே முழு கதையும் விரிவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !