உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படத்தின் வெற்றியை தூக்கி நிறுத்திய BTS சுவாரஸ்யங்களும், ரியல் விபத்துக்களும்

படத்தின் வெற்றியை தூக்கி நிறுத்திய BTS சுவாரஸ்யங்களும், ரியல் விபத்துக்களும்

திரைப்படப் படப்பிடிப்பின் போது எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளும், நடிகர்கள் ஸ்பாட்டில் சொந்தமாக யோசித்து நடிக்கும் இம்ப்ரூவைசேஷன் (Improvisation) காட்சிகளும் பல நேரங்களில் திரைப்படத்தின் மிகச்சிறந்த தருணங்களாக மாறிவிடுகின்றன. இவைகள் பல சமயங்களில் படத்தின் வெற்றியை உறுதி செய்து விடுகின்றன. திரைக்கு பின்னால் நடிகர்களின் திறமை, மறைக்கப்பட்ட விபத்துக்கள், சில சுவாரஸ்யமான சம்பவங்களும் திரையில் அப்படியே படமாக்கப்பட்டு, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சில படங்கள் இதோ...

நிஜமாகவே காயம் அடைந்தும் தொடர்ந்த காட்சிகள் :

விக்ரம் (பிதாமகன்):
படத்தின் இறுதிக்காட்சியில் சூர்யா இறந்துவிட்டதை அறிந்து விக்ரம் ஆவேசமாக ஓடிவந்து சடலத்தின் மீது விழ வேண்டும். அந்த உணர்ச்சிப்பூர்வமான ஓட்டத்தில், விக்ரமின் கால் பாறையில் பலமாக மோதி காயம் அடைந்தது. கடுமையான வலியையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து நடித்து முடித்தார். அந்த உண்மையான வேதனையே அக்காட்சியை மேலும் உருக்கமாக்கியது.

அஜித்குமார் (ஆரம்பம்):
'ஆரம்பம்' திரைப்படத்தின் கார் சேஸிங் காட்சியின் போது அஜித்தின் கால் இரண்டு கார்களுக்கு இடையே சிக்கிப் பலத்த காயமடைந்தது. ஆயினும் இயக்குநரின் 'கட்' சத்தம் வரும் வரை வலியைக் காட்டிக் கொள்ளாமல் காட்சியை முழுமையாக முடித்துக் கொடுத்தார்.

சூரி (விடுதலை - பாகம் 1):
சண்டைக் காட்சிகளின் போது எவ்வித டூப்பும் இல்லாமல் நடித்த சூரிக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இருப்பினும் படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முதலுதவி மட்டும் செய்து கொண்டு உடனடியாக அந்த சண்டைக் காட்சியை நடித்து முடித்தார்.

ஸ்பாட்டில் சொந்தமாகப் பேசி அசத்திய தருணங்கள் :

ரஜினிகாந்த் (பாட்ஷா):
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்ற புகழ்பெற்ற வசனத்திற்கு முன் ரஜினி கொடுக்கும் அந்தச் சிறிய சிரிப்பும், கையைத் தட்டும் பாணியும் ஸ்பாட்டில் அவர் சொந்தமாகச் சேர்த்ததுதான்.

கமல்ஹாசன் (பஞ்சதந்திரம்):
இப்படத்தின் பெரும்பாலான நகைச்சுவை வசனங்கள் மற்றும் டைமிங் கவுண்டர்கள் கமல்ஹாசன் மற்றும் கிரேஸி மோகன் இருவரும் ஸ்பாட்டில் உடனுக்குடன் பேசி உருவாக்கியவை. குறிப்பாக தொலைபேசி உரையாடல் காட்சிகள் பலவற்றில் வசனப் புத்தகத்தில் இல்லாத பல வரிகளை கமல் ஸ்பாட்டில் பேசி அசத்தினார்.

விஜய் சேதுபதி (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்):
என்ன ஆச்சு... ஆங்! என்ற ஒற்றை வசனத்தின் மாடுலேஷனையும், அந்த மேனரிசத்தையும் விஜய் சேதுபதி தன் சொந்த பாணியில் ஸ்பாட்டில் மாற்றி மாற்றிப் பேசி முழுப் படத்தையும் ஹிட் அடிக்க வைத்தார்.

வடிவேலு (நகைச்சுவைக் காட்சிகள்):
வடிவேலுவின் 80 சதவீத நகைச்சுவைக் காட்சிகள் ஸ்பாட்டில் இம்ப்ரூவைஸ் செய்யப்பட்டவைதான். 'வின்னர்' படத்தில் கைப்புள்ள, 'ப்ரண்ட்ஸ்' படத்தில் கான்ட்ராக்டர் நேசமணி செய்யும் அலப்பறைகள் பலவும் காட்சிக்களத்தில் அவர் சொந்தமாக யோசித்துச் செய்தவை.

திரையில் நாம் காணும் சில மறக்க முடியாத தருணங்கள், திட்டமிடப்படாத தற்செயல் நிகழ்வுகளினாலும் நடிகர்களின் அர்ப்பணிப்பினாலும் தான் காவியமாக மாறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !