'யேஷனகுலா'- தெலுங்கானா நாட்டுப்புற இசையில் கலக்கிய அனிருத்! குவியும் பாராட்டுக்கள்!!
நானி நடித்துள்ள 'தி பாரடைஸ்' படத்தின் இசை ஆல்பத்திலிருந்து 'யேஷனகுலா கட்டமீதா' என்ற இரண்டாவது பாடல் நேற்று வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான 'ஆயா ஷேர்' என்ற முதல் பாடல் மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று, டிரெண்டிங் பார்ட்டி பாடலாக ஹிட் அடித்தது. இந்நிலையில், தெலுங்கானா கிராமப்புற நாட்டுப்புறப் பாடலுக்குத் தனது நவீன பாணியில் இசை அமைத்து அசத்தியுள்ளார் அனிருத்.
காசர்லா ஷியாம் என்பவர் தனது தனித்துவமான பாணியில், அசல் தெலுங்கானா கிராமத்து வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த பாடலை எழுதியுள்ளார். நாட்டுப்புறப் பாடகர்களான பிரபா பங்காரிகல்லா மற்றும் அதுலா ஜங்கிரெட்டி ஆகியோர் தங்களின் மண்வாசனையுள்ள குரல்களால் இப்பாடலுக்கு உயிரூட்டியுள்ளனர். தெலுங்கானா பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியதாக இருக்கும் இப்பாடலில் வலுவான நாட்டுப்புற சுவையை வெளிப்படுத்தும் இசையை கொடுத்துள்ளார் அனிருத். இதற்காக தெலுங்கானா ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த படத்தின் காட்சிகள் மற்றும் உருவாக்கத்தின் வீடியோக்களுடன் படக்குழு இப்பாடலை வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு நானியும் கீர்த்தி சுரேஷூம் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடியுள்ளனர். கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் அவர் ஆடும் முதல் ஸ்பெஷல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் படம் வெளியாகும்போது, இந்த மண்வாசனை பாடல் பெரிய திரையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகும் தி பாரடைஸ் படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.