பிளாஷ்பேக் : கும்பக்கரை தங்கையாவை சூப்பர் ஹிட்டாக்கிய இளையராஜா
தியாகராஜன் நடித்த மலையூர் மம்பட்டியான், கொம்பேறி மூக்கன், சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி, ராம்கி நடித்த மருதுபாண்டி, பாணியில் பிரபு நடித்த படம் 'கும்பக்கரை தங்கைய்யா'. இதுபோன்ற கிராமத்து ஹீரோக்கள் கதை தொடர்ந்து வெற்றி பெற்றதால் பிரபுவிற்கும் அப்படியொரு படத்தில் நடிக்கும் ஆர்வத்தை தூண்டியது.
கிராமத்து காதல் கதைகளை இயக்கி வந்த கங்கை அமரன் இந்த ஆக்ஷன் படத்தை இயக்கினார். படத்தில் சிலம்பம் உள்ளபட ஏராமான கிராமத்து பாணி சண்டை காட்சிகள் இடம்பெற்றது. பிரபு ஜோடியாக கனகா நடித்தார். இவர்களுடன் பாண்டியன், நம்பியார், கோவை சரளா, காந்திமதி உள்ளிட்ட பலர் நடித்தனர். சங்கிலி முருகன் தயாரித்தார்.
1991ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று சிகரம், வா அருகில் வா, ஈரமான ரோஜாவே, ரஜினி நடித்த தர்மதுரை படங்களுடன் வெளியாகி அதற்கு நிகரான வெற்றியை பெற்றது. சுமாரான ஆக்ஷன் கதைதான் என்றாலும் இளையராஜாவின் பாடல்கள் படத்தை வெற்றி பெற வைத்தது. பாட்டு உன்னை இழுக்குதா, பூத்துப்பூத்து குலுங்குதடி பூவு, தென்றல் காத்தே தென்றல் காத்தே, கூடலூரு குண்டுமல்லி, கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா, கும்பம் கரை சேத்த தங்கய்யா, என்னை ஒருவன் பாடச் சொன்னான் என அத்தனைப் பாடல்களும் பட்டையைக் கிளப்பின.