பிடித்த 3 படங்கள், அடிக்க வந்த லிங்குசாமி, மோதிரம் பரிசு : டோரதி நிகழ்ச்சியில் மிஷ்கின் பேச்சு
சென்னையில் நடந்த டோரதி பட சிறப்பு நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின், லிங்குசாமி, வசந்தபாலன் ஆகியோர் கலந்து கொண்டு படம் குறித்து பேசினர். இயக்குனர் மிஷ்கின் பேசுகையில் ''என் வாழ்கையில், கடந்த 30 ஆண்டுகளில் பார்த்த சிறந்த படங்கள் 1) கடைசி விவசாயி, 2) கொட்டுக்காளி, 3) டோரதி. இந்த படங்களுக்கு பின்னர்தான் மற்ற படங்கள், இதில் என் படங்களும் அடக்கம்.
இதை மணிரத்னத்திடம் கூட சொன்னேன். அந்த பார்ட்டியில் என்னை லிங்குசாமி அடிக்க கூட வந்தார். ஆனால், என் கருத்தில் தெளிவாக இருக்கிறேன். நான் இளையராஜாவின் தீவிர ரசிகர். என்னை விட அவர் ரசிகர் யாரும் இருக்க முடியாது. டோரதி படத்தில் வண்ணக்கிளியே, மாதங்கி, மீனாட்சி என அருமையாக பாடல் எழுதியிருக்கிறார். அவர் பாடல் எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கபிலனை நான் எழுத சொல்ல சொன்னேன். அதில்தான் அவருக்கும், எனக்கும் பிரச்னை வந்தது.
வேண்டுகோள்
என்னுடைய உதவியாளர்கள் ஒரு திரைப்படம் சர்ச்சையாகி கொண்டு இருக்கிறது என்று சொன்னார்கள். அப்போது அது நல்ல படம் எனக்கு தெரிந்தது. உடனே படம் பார்த்து என் கருத்தை வீடியோவில் பதிவிட்டேன். இன்றைய இளைய தலைமுறையினருக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இளையராஜா உயிருடன் இருக்கும் பொழுதே அவருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுங்கள் அல்லது நீங்கள் உயிருடன் இருக்கும்போது அவருடன் பணியாற்றுங்கள்.
மோதிரம் பரிசு
டோரதியில் சிறப்பாக நடித்த ரிஷிகாந்த் மற்றும் சனத்தின் கால்களில் நான் விழ வேண்டும். சபை நாகரிகத்தின் காரணமாக என்னுடைய மோதிரத்தை இவர்களுக்கு பரிசளிக்கிறேன். இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் கடைசியில் எடுத்த படம் மொக்க படம் (ரெட்ரோ). ஆனால், இது அற்புதமான படம்.
முத்தமிடுவதும் சரியே
டோரதியில் கீர்த்தி சுரேஷ் எதற்காக இருக்கிறார் என மூளை இல்லாதவர்கள் கேட்கிறார்கள் என்னை பொறுத்தவரையில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் இயேசுவைப் போல சிலுவையில் அறைந்து படத்தில் உயிர் நீத்திருக்கிறது. குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு திரைப்படத்தில் ஒரு ஆண் மற்றொரு ஆணை அரிவாள் கொண்டு வெட்டுவது எந்த வகையில் ஏற்புடையதோ அதே போல ஒரு ஆண் மற்றொரு ஆணை முத்தமிடுவது போல நடிப்பது ஏற்புடையது.
ஒடிசியை விட டோரதி சிறந்தது
இதில் நடித்திருக்கக் கூடிய திருநங்கை ஜீவா சுப்பிரமணியம் பற்றி நான் இந்த மேடையில் சொல்ல வேண்டும். அவரை என் டிரைன் படத்தில் நடிக்க வைக்க நினைத்தேன். அது நடக்கவில்லை. அவள் திட்டினால், இப்போது அவளுக்கு சிறந்த படம் கிடைத்து இருக்கிறது. கிறிஸ்டோபர் நோலனின் ஒடிசி படத்தை விட டோரதி சிறந்த படம்.
இவ்வாறு மிஷ்கின் பேசினார்.