உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மாஸ்டர்' வியாபாரமும், வெளியீடும்...

'மாஸ்டர்' வியாபாரமும், வெளியீடும்...

2020ம் வருடம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டிய 'மாஸ்டர்' படம் அடுத்த வாரம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது.

விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த படங்களின் பட்ஜெட்டை விட இந்தப் படத்தின் பட்ஜெட் குறைவு தான் என்றாலும் விஜய்யின் சம்பளம் மட்டும் முந்தைய படத்தை விட 20 கோடி அதிகம் என்கிறது கோலிவுட் வட்டாரம். 80 கோடி வரை விஜய் இப்படத்திற்காக சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் சம்பளம் 10 கோடி என்கிறார்கள். ஒட்டுமொத்தமாக படத்தின் பட்ஜெட் 180 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் தமிழ்நாடு உரிமை 70 கோடி, ஆந்திரா 9 கோடி, கேரளா 7 கோடி, வெளிநாட்டு உரிமை 30 கோடி, வட இந்திய உரிமை, ஹிந்தி சாட்டிலைட், டிஜிட்டல் ஆகியவை என 25 கோடி, தமிழ் சாட்டிலைட் உரிமை 30 கோடி, ஓடிடி உரிமை 20 கோடி, இசை மற்றும் இதர உரிமைகள் 5 என மொத்தமாக 200 கோடி வரை வியாபாரம் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்தை 700 தியேட்டர்கள் வரையிலும், கேரளாவில் 200 தியேட்டர்கள், ஆந்திரா, தெலங்கானா 400 தியேட்டர்கள், கர்நாடகா 100 தியேட்டர்கள், வட இந்தியாவில் 1000 தியேட்டர்கள், வெளிநாடுகளில் 1000 தியேட்டர்கள் வரையிலும் என மொத்தமாக 3500 தியேட்டர்கள் வெளியிட முயற்சித்து வருகிறார்களாம். இந்த வாரக் கடைசி வரையிலும் தியேட்டர்களுக்கான பதிவு நடக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

கொரோனா தொற்று பயத்தை மீறி மக்கள் பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டும் தியேட்டர்களுக்கு வந்தால் கூட எதிர்பார்த்த வசூலையும், லாபத்தையும் இந்தப்படம் பெற்றுவிட வாய்ப்புள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !