பனையேறும் தொழிலாளிகளின் வலியை கூறும் நெடுமி
பனையேறும் தொழிலாளிகளின் வாழ்வையும், வலியையும் பறைசாற்றும் வகையில் நெடுமி என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி எம்.வேல்முருகன் தயாரிக்கும் இப்படத்தினை அரிஷ்வர் புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் முதல் தயாரிப்பில் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர்களான நந்தா லக்ஷ்மண் மற்றும் ஏ.ஆர்.ராஜேஷ் இப்படத்தினை இயக்குகின்றனர்.
பனையேறும் தொழிலாளிகளின் வாழ்வியலைச் சுற்றி இக்கதை பிண்ணப்பட்டிருக்கிறது. பனையேறிகளின் வாழ்க்கை அத்தனை எளிதானது அல்ல. ஓங்கி வளர்ந்த பனையில் உயிரைப் பணையம் வைத்து ஏறி இறக்கும் கள்ளும், அதை பதமாக உருமாற்றி விற்கும் பதநீரும், பறித்து வீசும் ஓலையும் வயிற்றுப் பிழைப்புக்கானதே. ஆனால், அத்தொழிலில் அவர்கள் சந்திக்கும் சவால்களும், சுரண்டல்களும், அரசாங்கத்தின் பாராமுகமும் வேதனையின் சாட்சியாக இப்படத்தில் வெளிப்படும் என்கின்றனர் இயக்குநர்கள்.
இத்திரைப்படத்தின் காட்சிகள் 1990 காலகட்டத்தில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகனாக பிரதீப் செல்வராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக அபிநயா, குழந்தை நட்சத்திரமராக ஸரத்ராஜ் நடித்துள்ளனர். இவர்களுடன் வாசுதேவன், ஆதவ் உலகம், ரவி, ராம்கி ஆகியோர் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியுள்ளனர். மேலும் குட்டிப்புலி புலிக்குத்தி பாண்டி கொம்பன் போன்ற படங்களில் நடித்த ராஜசிம்மன் கடம்பன் ப்ரீத்தி ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள புதுப்பாக்கம், பாலக்காடு கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ளது.