19(1)(a) படத்திற்கு டப்பிங் பேச ஆரம்பித்த விஜய் சேதுபதி
கடந்த 2019ல் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் தற்போது இந்து வி.எஸ் என்பவர் டைரக்சனில் உருவாகும் 19(1)(a) என்கிற இன்னொரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதில் முதன்முறையாக விஜய்சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார் நித்யா மேனன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது இந்தப்படத்திற்காக டப்பிங் பேசும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் விஜய்சேதுபதி. இந்தப்படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த, அதேசமயம் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். அதனால், படப்பிடிப்பில் பேசி நடித்தது போல, டப்பிங்கிலும் தமிழ், மலையாளம் இரண்டையும் தனது சொந்த குரலிலேயே பேசுகிறாராம்.