சோனு சூட்டுக்கு பெருமை சேர்த்த விமான நிறுவனம்
கொரோனா தொற்று கடந்த வருடம் பரவிய போது மக்கள் பலர் பல்வேறு இடங்களில் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டனர். மாநிலம் விட்டு மாநிலம் பிழைக்க வந்தவர்கள் ரயில், பேருந்து வசதி இல்லாத காரணத்தால் முடங்கிக் கிடந்தனர். அவர்களை தனது சொந்த செலவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் கார்கள் மூலம் ஏன் விமானங்கள் மூலம் கூடத் திரும்ப செய்து கொடுத்தவர் நடிகர் சோனு சூட்.
வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட மாணவ, மாணவிகளைக் கூட விமானம் மூலம் திரும்ப அழைத்து வந்தார். அப்போது அவருக்கு தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் உறுதுணையாக இருந்தது.
சோனு சூட்டின் சேவையைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ஒரு விமானத்தில் அவருடைய பிரம்மாண்ட போஸ்டரை ஒட்டி சிறப்பித்துள்ளது. அவருடைய சிறந்த சேவையைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அவர்களது 737 விமானம் ஒன்றில் அதைச் செய்துள்ளார்கள். தங்களுக்கும் பலருக்கும் சோனு சூட் முன்னுதாரணமாக விளங்கியதாவ அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இப்படி ஒரு சிறப்பைப் பெறும் முதல் இந்திய நடிகர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது. “இது மிகப் பெரும் பெருமை. எனது பணியில் மற்றவர்களையும் பெருமைப்படுத்துவேன் என நினைக்கிறேன். ஊரடங்கு காலத்தில் பல்வேறு இடங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பாக கொண்டு வருவதில் ஸ்பைஸ் ஜெட் உதவி புரிந்தததற்கு நன்றி. “மோகா டூ மும்பை முன்பதிவில்லாத டிக்கெட்டில் வந்தது ஞாபகம் இருக்கிறது....” என நடிகர் சோனு சூட் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.