நடிகர் தீப்பெட்டி கணேசன் மறைவு
ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கார்த்திக் எனும் தீப்பெட்டி கணேசன். சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் வேறு சில தொழில்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், குழந்தைக்கு பால் வாங்க கூட பணமில்லை என கூறி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார். அதையடுத்து சிலர் அவருக்கு உதவினர்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசன் இன்று(மார்ச் 22) காலை மறைந்தார். இதுகுறித்து அவரின் மனைவி கூறுகையில், ‛‛ குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த மார்ச் 9ல் எனது கணவரை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். தொடர்ந்து உடல்நிலை நன்றாக தேறி வந்தது. இன்று வீட்டிற்கு செல்லலாம் என டாக்டர்கள் கூறியிருந்தனர். இதற்காக காலையில் தயாராக இருந்தோம். டீ கேட்டார், வாங்கி வந்து கொடுத்தேன். குடித்துவிட்டு நன்றாக தான் இருந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என கண்ணீர் மல்க கூறினார்.
மறைந்த தீப்பெட்டி கணேசனுக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தீப்பெட்டி கணேசனின் மரணத்தை தொடர்ந்து, இவரது குழந்தைகளின் படிப்பு செலவு, எதிர்காலம் ஆகியவற்றை தான் கவனித்து கொள்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் குறிப்பிடுகையில், “இவ்வருடம் அவரது பிள்ளைகளின் படிப்பு செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன். இனிவரும் காலத்திலும் என்னால் இயன்ற உதவிகளை அவரது குழந்திகளுக்கு செய்வேன் என கூறியுள்ளார்.