சுல்தானுக்கு வருத்தத்துடன் வாழ்த்து சொன்ன நாகார்ஜுனா
ADDED : 1649 days ago
கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் டைரக்சனில் உருவாகியுள்ள 'சுல்தான்' படம் நாளை வெளியாக இருக்கிறது. அதேசமயம் தெலுங்கில் நாகார்ஜுனா நடித்துள்ள 'வைல்ட் டாக்' என்கிற படமும் நாளை தான் வெளியாகிறது. இந்தநிலையில் 'வைல்ட் டாக்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நாகார்ஜுனா, சுல்தான் படத்துக்கு வருத்தத்துடன் வாழ்த்து சொன்னார்.
இந்த நிகழ்வில் நாகார்ஜுனா பேசும்போது, “தமிழில் எனக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவர் பெயர் கார்த்தி. அவரது படமான சுல்தான் கூட நாளை தான் வெளியாகிறது. ஆனால் இரண்டு பேரின் படங்களும் ஒன்றாக வெளியாவதில் எனக்கு இஷ்டமில்லை.. அதேசமயம் அவரது படம் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” என கூறினார்.
நாகார்ஜுனாவும் கார்த்தியும் தோழா என்கிற படத்தில் பாசமான அண்ணன் தம்பி போல இணைந்து நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கில் இருவருமே அந்தப்படத்தின் வெற்றியை ஒன்றாக ருசித்தனர்.. அதனால் தற்போது தெலுங்கில் இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் மோதுவது போல வெளியாகிறதே என்கிற வருத்தத்தில் தான் நாகார்ஜுனா அப்படி கூறியுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது.