உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீக்கிரம் குணமாகி வாங்க விவேக் : திரையுலகினர் பிரார்த்தனை

சீக்கிரம் குணமாகி வாங்க விவேக் : திரையுலகினர் பிரார்த்தனை

நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ உயிர்காக்கும் கருவி உதவியுடன் அவர் உயிருக்கு போராடி வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

கமல்
கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன். அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்.

ரஜினி

நண்பர் விவேக் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

விஜயகாந்த்

நகைச்சுவை நடிகர் விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். திரைப்படங்களில் சிந்திக்க வைக்கும் சமூக அக்கறை கொண்ட பல கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைப்பதிலும், சமூக சேவைகள் செய்வதிலும் என்றும் முதலிடத்தில் திகழும் நடிகர் விவேக், விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


உதயநிதி
உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்னக்கலைவாணர் அண்ணன் விவேக் நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன். அன்போடு பழகுவதிலும், சமூக சிந்தனையுடன் செயல்படுவதிலும் அண்ணனுக்கு நிகர் அவரே. அண்ணன் அவர்கள் மீண்டு வந்து தமிழக மக்களை சிரிக்க, சிந்திக்க வைக்கட்டும்.

சமுத்திரகனி
நமது அன்பான சின்ன கலைவானர் விவேக் சார், விரைவில் குணமடைந்து உற்சாகத்துடன் வர இறைவனை வேண்டுகிறேன். வாங்க விவேக் சார். உங்களுக்கு வயசு 100.

அனிருத்

சீக்கிரம் குணமாகி வாங்க விவேக் சார். நீங்கள் விரைந்து குணமாக ஆண்டவனை நாங்கள் வேண்டுகிறோம்.

கஸ்தூரி

பத்மஸ்ரீ விவேக் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சியானேன். எங்கள் அன்புக்குரிய விவேக், சட்டுபுட்டுனு குணமாகி சீக்கிரம் வாங்க.

மனோபாலா
என் அன்பு நண்பன் சின்ன கலைவாணர் விரைவில் குணமடைய பாபா துணையிருப்பார்... வாங்க விவேக் சார்...


இயக்குனர் சேரன்
சாலை தோறும் நிழல் தரவும், மரம் உருவாக்குவதற்கான அவசியம் அடுத்த தலைமுறை உணர்திடவும், எண்ணில்லா முயற்சிகள் செய்த நல்ல இதயம் நீங்கள்... நல்ல உள்ளங்கள் அனைவரின் ப்ரார்த்தனைகளால்... நிச்சயம் பூரண நலத்தோடு வருவீர்கள் விவேக்..

சீமான்

அருமைச் சகோதரர் விவேக் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகும் செய்திகள் வேதனையளிக்கிறது. அவர் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பி தனது கலைப்பணியைத் தொடர வேண்டுமென உள்ளன்போடு விழைகிறேன்.

குஷ்பு
நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் விவேக். மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் நன்றாக இருப்பார், மிக விரைவில் திரும்பி வருவார் என்று நம்புகிறேன். விரைவில் குணமடையுங்கள் ஜி.

இவர்கள் தவிர்த்து ஆர்யா, வெங்கட்பிரபு, பிரசன்னா, குஷ்பு, சிபிராஜ், கிருஷ்ணா, அருண் விஜய், சோனியா அகர்வால் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் விவேக் சீக்கிரம் குணமாகி வர வேண்டும் என தங்களது டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !