வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் சுரேஷ்கோபி
தொண்ணூறுகளில் மலையாள சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலில் இறங்கியதால் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்தநிலையில் மீண்டும் நடிப்புக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. ஆனால் தனது சக நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போல இளமையான கதாபாத்திரங்களில் நடிக்கமால், வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
அந்தவகையில் கடந்த வருடம் வெளியான 'வரனே ஆவிஷ்யமுண்டு' என்கிற படத்தில், ஒரு இளம்பெண்ணுக்கு தாயான ஷோபனாவை காதலிக்கும் வயதான பிரம்மச்சாரி வேடத்தில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் காவல் மற்றும் பாப்பன் ஆகிய படங்களில் அவர் ஹீரோவாக நடித்தாலும், அவை ஆக்சன் படங்களாக உருவாக்கி வந்தாலும் கபாலி ரஜினி போல நரைத்த தாடி மீசையுடன் சற்றே வயதான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான அந்தப்படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.