உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இந்தியன் 2' பஞ்சாயத்தில் இறங்குவாரா கமல்ஹாசன் ?

'இந்தியன் 2' பஞ்சாயத்தில் இறங்குவாரா கமல்ஹாசன் ?

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படம் கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமென நீதிமன்றத்தை நாடியது லைகா நிறுவனம். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

படத்தின் நாயகன் கமல்ஹாசன், அந்த விவகாரம் நடந்து கொண்டிருந்த போது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தார். தேர்தல் முடிந்த பிறகு அவர் இந்த விவகாரத்தில் தலையிடுவார் என திரையுலகத்தில் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், திரை மறைவிலும் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரையில் நடந்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள். தேர்தல் முடிவு வந்த பிறகு கமல்ஹாசன், கட்சியினருடன் தான் பேச்சுவார்த்தை நடத்தினாரே தவிர, 'இந்தியன் 2' விவகாரத்தில் எதுவும் நடத்தவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையில் கமல்ஹாசன் தலையிட்டால் மட்டும் தான் இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும். சினிமாவை விட்டு தான் அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் நஷ்டம் வரும் என்று பேசிய கமல்ஹாசன், 'இந்தியன் 2' படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் முதலீடு செய்த 200 கோடி ரூபாயையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதே திரையுலகினரின் கருத்தாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !