பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா'
மரணத்தை வென்ற மார்க்கண்டேயனின் கதையை வைத்து, கே.ராம்நாத் இயக்கிய 'மார்க்கண்டேயா' என்ற படம் 1935ல் வெளியானது. இதில் மாஸ்டர் வி.என்.சுந்தரம் மார்க்கண்டேயனாக நடித்தார். அவருடன், ராஜபாளையம் குழந்தைவேலு பாகவதர், கண்ணா பாய் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இதேகதை 1957ஆம் ஆண்டு பக்த மார்க்கண்டேயா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி நடித்த 'தெனாலி ராமன்' , 'நிச்சய தாம்பூலம்' , எம்.ஜி.ஆர் நடித்த 'பட்டிக்காட்டு பொன்னையா' படங்களை இயக்கிய பி எஸ் ரங்கா தயாரித்து, இயக்கினார்.
குழந்தை இல்லாத மிருகண்ட மகரிஷிக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கும் சிவபெருமான், புத்திசாலியான உன் மகன் 16 வருடங்கள் மட்டுமே வாழ்வான் என்று சொல்லி விடுகிறார். மகனின் 16வது வயதில் பெற்றோர், குழந்தை உயிரோடு இருக்க மாட்டானே என்று கவலைபடுகின்றனர். எமன் பாசக் கயிறை வீசும் நேரத்தில் அங்கு காட்சிக் கொடுக்கும் சிவபெருமான், தன் பக்தனான மார்க்கண்டேயனை மீட்பதுதான் படம்.
மாஸ்டர் ஆனந்த், மார்க்கண்டேயனாக 2 மொழிகளிலும் நடித்தார். வி.நாகையா, கே.ஏ.தங்கவேலு, பத்மினி பிரியதர்ஷினி, நாகேந்திர ராவ் உட்பட பலர் நடித்தனர். கன்னடத்துக்காக சில நடிகர்கள் மாற்றப்பட்டனர். படப்பிடிப்பு முழுவதும் பி. எஸ் ரங்காவுக்கு சொந்தமான விக்ரம் ஸ்டூடியோவில் நடந்தது.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர், படத்தில் இடம்பெற்ற 16 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதுவே படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.