உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய 'ஒருதலை ராகம்'

தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய 'ஒருதலை ராகம்'

தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் சில படங்கள் வெளிவந்து அப்படங்கள் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தின. அந்த வகையில் 1980ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி வெளிவந்த படமான 'ஒருதலை ராகம்' ஒரு முக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.

படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அறிமுகமான இ.எம்.இப்ராஹிம் இன்று மரணமடைந்தார். 40 வருடங்களுக்கு முன்பு ரசிகர்களிடம் அதிகம் அறியப்படாத கலைஞர்களை வைத்து ஒரு படத்தைத் தயாரிப்பதென்பது எவ்வளவு சவாலான விஷயம்.

அந்த சவாலை தைரியமாக ஏற்று படத்தை எடுத்து முடித்து வெளியிட்டு பெரும் வெற்றியைக் கண்டவர் தயாரிப்பாளர் இ.எம்.இப்ராஹிம். படத்தின் டைட்டிலில் இவருடைய பெயர்தான் இயக்குனர் என்று வரும். ஆனால், படத்தை டி.ராஜேந்தர் தான் இயக்கியிருப்பார் என்று அன்றிலிருந்தே சொல்பவர்கள்தான் அதிகம்.

சினிமாவில் காலம் காலமாக காட்டப்பட்டு வந்தவற்றை 'ஒருதலை ராகம்' படத்தில் முறியடித்திருப்பார்கள். கல்லூரி மாணவர்கள் என்றால் அந்த வயதில் உள்ள நடிகர்கள், நடிகைகள் மற்றும் மாயவத்தில் பிரபலமாக இருக்கும் எவிசி கல்லூரியில் முழு படப்பிடிப்பு என முற்றிலும் வெளிப்புறப் படப்பிடிப்பில் மக்களை ரசிக்க வைத்த படம்.

சங்கர், ரவீந்தர், சந்திரசேகர், தியாகு, ரூபா, உஷா படத்தில் நடித்த பலருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள். டி.ராஜேந்தர் இசையில் அவரே எழுதிய அனைத்துப் பாடல்களும் தாறுமாறு ஹிட் என இந்தப் படம் அன்று ஏற்படுத்திய தனி பாதையில் தொடர்ந்து பல படங்கள் பயணித்தன.

இம்ராஹிம் வாய்ப்பு தந்ததால்தான் டி.ராஜேந்தர் என்ற ஒரு கலைஞர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தார். சினிமாவில் பல வெற்றிகளை பலர் கொடுக்கலாம், ஆனால், தடம் பதிக்கும் வெற்றிகளைக் கொடுப்பவர்களை மறக்கக் கூடாது. அந்த விதத்தில் இ.எம்.இப்ராஹிம் மறக்க முடியாத ஒரு தயாரிப்பாளர், இயக்குனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !