உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோனு சூட் செய்வதை அனைத்து நடிகர்களும் செய்வார்களா?

சோனு சூட் செய்வதை அனைத்து நடிகர்களும் செய்வார்களா?

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் நாடு முழுவதுமே பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர்களும், சமூக சேவை செய்பவர்களும் அரசுகளுக்குத் துணையாக தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

சினிமா நடிகர்களில் ஒரு சில சிறிய நடிகர்கள் தான் அவர்களால் முடிந்த சிறிய உதவிகளைச் செய்வது வருகிறார்கள். தெலுங்கு நடிகர் அட்வி சேஷ், டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் தண்ணீர் பாட்டில்களை அனுப்பி வைத்தார். மற்றொரு தெலுங்கு நடிகரான ஹர்ஷவர்தன் ரானே ஆக்சிஜன் சேவைக்காக தன்னுடைய பைக்கை விற்கிறேன் என அறிவித்தார். மேலும், சிலர் அவர்களது சமூக வலைத்தள பக்கங்களில் உதவி தேவைப்படுபவர்களின் விவரங்களைப் பற்றிய தகவல்களை மறுபதிவிட்டு வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வில்லன் நடிகராக இருக்கும் சோனு சூட், கடந்த வருடம் கொரோனா முதல் அலை வந்த போதே பல்வேறு விதமான உதவிகளைச் செய்தார். அதைத் தொடர்ச்சியாக செய்து வருபவர், தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையிலும் தன்னுடைய சோனு அறக்கட்டளை மூலமாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் உதவிகளை அனுப்பி வருகிறார்.

இன்று ஆக்சிஜனுக்குத் தேவையான வசதிகளை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார். “வலிமையாக இரு இந்தியா, உங்களைத் தேடி என்னால் முடிந்த ஆக்சிஜன்” என லாரிகள் மூலம் அவற்றை அனுப்பும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு வில்லன் நடிகர் இந்த அளவிற்கு கடந்த ஒரு வருட காலமாக களத்தில் இறங்கி உதவிகளைச் செய்யும் போது நாட்டில் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோ நடிகர்கள் எந்த உதவிகளையும் முன்னெடுக்காமல் இருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !