‛கில்லி பட புகழ் நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி
விஜய்யின் கில்லி படத்தில் அவரது நண்பர்கள் குழுவில் இடம் பெற்ற ஆதிவாசி என்ற கேரக்டரில் நடித்த நடிகர் மாறன்(48) கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையில் திரைப்பிரபலங்கள் பலரும் இறந்து வருகிறார்கள். நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், இயக்குனர் கே.வி.ஆனந்த்(மாரடைப்பு என்றாலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது), நடிகர் ஜோக்கர் துளசி என பலரும் மறைந்த நிலையில் இன்று மற்றுமொரு நடிகர் பலியாகி உள்ளார். அவர் பெயர் மாறன்.
தரணி இயக்கத்தில் விஜய் நடித்த கில்லி படத்தில் அவரது நண்பராக ஆதிவாசி எனும் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் மாறன்(48). தொடர்ந்து டிஷ்யும், தலைநகரம், வேட்டைக்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் சண்டைக்கலைஞராகவும் நடித்துள்ளார். அதோடு கானா பாடகரான இவர் மேடை கச்சேரிகளிலும் பாடி வந்தார்.
செங்கல்பட்டு பகுதியில் வசித்து வந்த இவர், சில தினங்களுக்கு முன் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாறன் உயிரிழந்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து சார்பட்ட பரம்பரை படத்தில் மாறனும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். இவர் மறைவுக்கு டுவிட்டரில் ரஞ்சித் தெரிவித்த இரங்கல் : ‛‛கடக்க முடியாத துயரம். எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் !!'' என பதிவிட்டுள்ளார்.
ஆர்யா இரங்கல்
நடிகர் ஆர்யாவும் மாறன் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.