உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷங்கர் படம் : ராம் சரண் மனமாற்றம்?

ஷங்கர் படம் : ராம் சரண் மனமாற்றம்?

இயக்குனர் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையே 'இந்தியன் 2' பட விவகாரத்தில் பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசனை எதையும் ஏற்றுக் கொள்ளாத ஷங்கர், மீண்டும் தயாரிப்பு நிறுவனம் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அதையடுத்து ஷங்கர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட தெலுங்கு, ஹிந்திப் படங்களைத் தற்காலிகமாக தடுத்து வைக்க அந்தந்த மொழி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் லைகா நிறுவனம் முறையிட்டுள்ளது.

பொதுவாக திரைப்பட சங்கங்களில் எடுக்கும் முடிவுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். அதை தன்னுடைய 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்திலேயே பயன்படுத்தியவர் தான் ஷங்கர்.

எனவே, ஷங்கர், ராம் சரண் இணைய உள்ள தெலுங்குப் படம் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ஷங்கர் பஞ்சாயத்திற்குக் கட்டுப்பட்டு 'இந்தியன் 2' படத்தை மீண்டும் இயக்கப் போனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தை முடித்தவுடன் ஷங்கர் படத்திற்கு முன்னதாகவே வேறு ஒரு இயக்குனருடன் ஒரு படத்தில் நடித்து முடிக்க ராம்சரண் திட்டமிட்டுள்ளாராம்.

விரைவில் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் விவகாரம் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அதில் எடுக்கப்படும் முடிவை வைத்துத்தான் அடுத்த நகர்வு இருக்கும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !