தனுஷ் ஒரு மந்திரவாதி : பாராட்டும் ஆனந்த் எல் ராய்
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷை தன்னுடைய 'ராஞ்சனா' படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆனந்த் எல் ராய். தற்போது தனுஷ், ஹிந்தியில் நடித்து வரும் 'அத்ரன்கி ரே' படத்தின் இயக்குனரும் ஆனந்த் தான். தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் கடந்த வாரம் தான் ஓடிடி தளத்தில் வெளியானது.
அப்படத்தை ஆனந்த் பார்த்துவிட்டு அவரது கருத்தை டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். “அற்புதம், புத்திசாலித்தனம்....கர்ணன் படத்தின் அனுபவத்தை இப்படித்தான் என்னால் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்ன ஒரு அற்புதமாக கதை சொல்லியிருக்கிறார். உங்கள் எண்ணங்களை செல்லுலாய்டில் அழகாக வரைந்திருக்கிறீர்கள். தனுஷ், நீ ஒரு நடிகர் என நான் நினைத்தேன், எனது நண்பா நீ ஒரு மந்திரவாதி என என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'கர்ணன்' படம் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியான போது கிடைத்த விமர்சனம், பாராட்டுக்களை விட தற்போது ஓடிடி தளத்தில் வெளிவந்த பிறகு பலரும் பல காட்சிகளை நிறுத்தி நிறுத்திப் பார்த்து தற்போது இரண்டாவது ரவுண்டாக விமர்சித்து வருகிறார்கள்.