எஸ்.எஸ்.குமரன் இயக்கிய கொரோனா விழிப்புணர்வு குறும்படம்
கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி நபரும் இந்த சூழலில் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியதும் அவசியம். குறிப்பாக வெளியில் செல்லும்போது எப்போதும் முக கவசம் அணிதல் என்பது, ஒரு அனிச்சை செயலாகவே நமக்குள் நடந்திட வேண்டும். இது கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தவிதமாக பொது இடங்களில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.எஸ்.குமரன், நோ கொரோனா மூவ்மென்ட்' என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். தெருவில் சுற்றும் பிச்சைக்காரர் ஒருவர் கூட, முக கவசம் அணிய வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் உணர்த்தும் விதமாக இந்த குறும்படம் தயாராகியுள்ளது. இந்த குறும்படத்தை சாய் வில்லேஜ் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன். இந்த குறும்படத்தை நடிகர்கள் சுஹாசினி மணிரத்னம் & காளி வெங்கட் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் 10லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.