பிறந்த பயனை இளையராஜா இசையால் அடைந்தேன் - பார்த்திபன்
இசையமைப்பாளர் இளையராஜா இன்று(ஜூன் 2) தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களுடன் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் டுவிட்டரில், ‛‛கண்ணுக்குள் கண்டுவிடும் பரப்பில்லை வானம். கண்டதையெல்லாம் ஒப்புக்கொள்வதுமில்லை நம் மனம். என் ஞானத்திற்குள் அகப்படாத பெரும்பொருள் இசைஞானி.
தரை மார்க்கமாக மாநிலங்கள் கடக்கலாம், கடல் மார்க்கமாக அண்டை நாடுகள் கடக்கலாம், ஆகாய மார்க்கமாக கண்டங்கள் கடக்கலாம். ஆனால் பக்தி மார்க்கமாகவே மாய சக்திகள் உணரலாம். உணராத ஒரு சக்தியை நான் பக்தியோடு பார்க்கிறேன், அப்படியாவது அறிய முடிகிறதா என ஆராய்கிறேன். அப்படி என் ஆராதனைக்குரியவர் பெரியவர் திரு இளையராஜா அவர்கள். (பக்தி = அகம் நோக்கி ஊர்தல்)
பிறந்த பயனையே அவரின் இசையால் அடைந்தவன், பிறந்த நாளில் அவரை என்ன சொல்லி வாழ்த்த? ஆனாலும் ஏதேதோ சொல்ல முற்பட்டேனே... அதுதான் அறியாமை என்பது.