நடிகரை கரப்பான்பூச்சி என கிண்டலடித்த கங்கனா
பொதுவாகவே அதிரடியான கமெண்ட்டுகளை தெரிவிப்பதற்கு கொஞ்சமும் தயங்கமாட்டார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நடிகரை கரப்பான்பூச்சி என அவர் விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அப்படி அழைக்கும் அளவுக்கு அந்த நடிகர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தான் ஆச்சர்யம்.
விஷயம் இதுதான்.. தமிழில் ராதாமோகனின் இயக்கத்தில் வெளியான கௌரவம் படத்தில் நடித்தவர் நடிகை யாமி கவுதம். சமீபத்தில் இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முந்தைய நாள் தனது மணப்பெண் அலங்காரத்தை, சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார் யாமி கவுதம். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் மகிழ்ச்சியாகவும் கேலி கிண்டல்களுடனும் கமெண்ட் பண்ணி வந்தனர். சின்னத்திரை நடிகரும் பாலிவுட்டின் குணச்சித்திர நடிகருமான விக்ரம் மாசே என்பவர் இந்த அலங்காரத்தில் யாமி கவுதமை பார்ப்பதற்கு ராதையை போல் இருக்கிறார் என புகழ்ந்து கமெண்ட் கொடுத்திருந்தார்
அந்த பக்கத்தில் பலரது கமெண்ட்டுகளுக்கும் பதில் கமெண்ட் கொடுத்து வந்த கங்கனா ரணவத், விக்ரம் மாசேவின் கமெண்ட்டை படித்துவிட்டு, “எங்கிருந்து திடீரென வந்தது இந்த கரப்பான்பூச்சி.. எடு என்னுடைய செருப்பை..” என்று பதில் கமெண்ட் பதிவு செய்துள்ளார்.
ஒருவேளை இந்த விக்ரம் மாசே, தனது நண்பர் வட்டாரத்தில் உள்ளவர் என்பதால் அப்படி கூறினாரா, இல்லை, யாமி கவுதமை அவர் புகழ்வது பிடிக்காமல், அப்படி கூறினாரா என்பது தெரியவில்லை.. இருந்தாலும் கங்கனாவின் இந்த கமெண்ட்டுக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்