கடன் விவகாரம் : ஆர்.பி.சவுத்ரி, விஷால் நேரில் ஆஜராக போலீஸ் சம்மன்
ADDED : 1688 days ago
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி. திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், சினிமா பைனான்சியராகவும் உள்ளார். 95க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். இதுவரை ஆர்.பி.சவுத்ரி மீது எந்தவிதமான புகாரும் வந்ததில்லை.
இந்த நிலையில் நடிகர் விஷால் ஆர்.பி.சவுத்ரியிடம் தான் கடன் பெற்றதாகவும், கடனை திருப்பி செலுத்திய பிறகும் கடனுக்காக கையெழுத்திட்டு கொடுத்த டாக்குமெண்டுகளை திருப்பித் தரவில்லை என்றும் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தியதில் விஷால் 3 கோடி கடனாக வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்தும் அதற்காக வழங்கப்பட்ட காசோலைகள் மற்றும் முக்கிய ஆவணங்களைஆர்.பி.சவுத்ரி திரும்ப வழங்கவில்லை என்று தெரியவந்தது.
இதை தொடர்ந்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் புகார் அளித்த நடிகர் விஷால் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இருவர் சார்பிலும் அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள் என்று தெரிகிறது.