உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா

'பிக் பாஸ்' டாஸ்க்கை நிஜமாக்கிய அர்ச்சனா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் கடந்த வருட நான்காவது சீசனின் போட்டியாளராக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் 'அன்பு கேங்' என்று சில போட்டியாளர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு ரசிகர்களின் பலத்த விமர்சனங்களையும் பெற்றார்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இருந்தாலும் அதற்கு முன்பு அவர் பணியாற்றிய ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் வாங்கிய பெயரைப் போல அவரால் பெயர் வாங்க முடியவில்லை. சமீபத்தில் அவரது யு டியூப் சேனலில் இடம் பெற்ற 'பாத்ரூம்' வீடியோவும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது ரேடியோ மிர்ச்சி எப்எம்-மில் ஆர்ஜே-வாக இணைந்துள்ளார். இன்று முதல் 'ஹை சென்னை வித் அச்சுமா' என்ற நிகழ்ச்சியை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை தொகுத்து வழங்குகிறார்.

கடந்த வருட பிக் பாஸ் சீசனில் ஒரு டாஸ்க்கில் 'ரேடியோ ஆர்ஜே' போல அர்ச்சனா பேசியது அவருக்கு மிகப் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. அந்த டாஸ்க்கை தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஆரம்பித்துவிட்டார். அர்ச்சனாவின் புதிய ஆர்ஜே பணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !