ஓடிடியில் வெளியாகும் தேன்
ADDED : 1570 days ago
கடந்த மார்ச் மாதம் தியேட்டர்களில் வெளியான படம் தேன். சினிமா விமர்சகர்கள், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த படம் கொரோனா தொற்று காரணமாக தியேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளிவருகிறது.
கணேஷ் விநாயகம் இயக்கி உள்ள இந்தப் படத்தில் தருண் குமார், அபர்னதி, அருள்தாஸ், பால லட்சுமணன், அனுஸ்ரீ உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார், சரத் பரத்வாஜ் இசை அமைத்திருந்தார்.
ஒரு இளம் கிராமப்புற மற்றும் படிக்காத தேனீ வளர்ப்பவரின் பயணத்தை இந்த படம் காட்டுகிறது. அவர் தனது மனைவியை ஒரு அரிய நோயிலிருந்து காப்பாற்ற பல சவால்களை எதிர்த்துப் போராடுகிறார். வேலு (தருண் குமார்) மற்றும் பூங்கோடி (அபர்நதி) ஆகியோரின் வாழ்க்கையை சுற்றி அமைந்தது தான் தேன் படத்தின் மைய கதை.
அதிகாரத்துவ சிக்கல்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாமை ஆகியவை, சமூகத்தின் யதார்த்தத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றுள்ளது. இந்தியன் பனோரமா 2020ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்றாகும். 11வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா, டெல்லி என்.சி.ஆர், இந்தியா, கல்ட் கிரிட்டிக் திரைப்பட விழா , புது தில்லி திரைப்பட விழா, அயோத்தி திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. தற்போது சோனி லிவ் தளத்தில், வருகிற 25ம் தேதி வெளிவருகிறது.