அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினி நாளை கோல்கட்டா பயணம்
ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த கலகலப்பான படமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. படத்தை முழுமையாக முடிந்து எடிட் போனபிறகு தான், இன்னும் சில காட்சிகள் மீதமிருப்பது தெரியவந்திருக்கிறது.
சமீபத்தில் தான் மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்று சென்னை திரும்பினார். இந்நிலையில் தற்போது அவர் நாளை அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக கொல்கத்தா செல்ல இருக்கிறார். இன்னும் 20 நாட்கள் வரை படத்தின் படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளதால் நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினிக்கான காட்சிகள் சில நாட்கள் மட்டும் படமாக்கப்பட இருக்கின்றன. பின்னர் ரஜினி திரும்பிவிட ரஜினி அல்லாத காட்சிகளை படமாக்க உள்ளார்கள்.