ஆர்ஆர்ஆர் - நட்பு பாடல் 5 மொழிகளில் வெளியீடு
ராஜமவுலி இயக்கத்தில், கீரவானி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தின் கரு ஜுனியர் என்டிஆர், ராம்சரண் சம்பந்தப்பட்ட நட்பு என்பதால் அதையே பொருளாகக் கொண்டு நட்பு என்ற பெயரில் தமிழ், தோஸ்தி என்ற பெயரில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பிரியம் என்ற பெயரில் மலையாளம், ஆகிய மொழிகளில் பாடல்களை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ்ப் பாடலை அனிருத், தெலுங்குப் பாடலை ஹேமசந்திரா, கன்னடப் பாடலை யாசின் நிசார், மலையாளப் பாடலை விஜய் யேசுதாஸ், ஹிந்திப் பாடலை அமித் திரிவேதி ஆகியோர் பாடியுள்ளனர்.
பிரம்மாண்ட இணைந்த கைகள் அரங்கின் பின்னணியாக இருக்க, இரு பக்கங்களிலும் பிரம்மாண்ட தூண்கள், ஆங்காங்கே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் அரங்கில் இசையமைப்பாளர் கீரவானியுடன் ஒவ்வொரு மொழியிலும் பாடும் பிரபலங்கள், நடனக் குழுவினருடன் பாடி நடித்துள்ளனர்.
ஹம்மிங் வரும் காட்சிகளில் ஐந்து மொழிகளிலும் பாடும் பாடகர்கள் ஒன்றாக ஹம்மிங் செய்வதும், பாடலின் கடைசியில் படத்தின் நாயகர்களான ஜுனியர் என்டிஆர், ராம்சரண் இசையமைப்பாளர் கீரவானியின் தோளில் நட்பாய் கை வைக்கும் காட்சிகள் ஒரு நட்புப் பாடலுக்கான பொருத்தமான படமாக்கலாக உள்ளது.
கீரவானி தமிழில் மரகதமணி என்று அழைக்கப்படுபவர். தமிழ் வீடியோவில் மட்டும் அவரது பெயர் மரகதமணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.