மோகன்லால்-மீனாவுக்கு விருந்தளித்த மோகன்பாபு
ADDED : 1519 days ago
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான லூசிபர் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்த பிரித்விராஜ் - மோகன்லால் கூட்டணி தற்போது மீண்டும் 'ப்ரோ டாடி' படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப்படத்தில் கதாநாயகியாக மீனா நடிக்கிறார். பிரித்விராஜ் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு மோகன்லால்-மீனா இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து மகிழ்ந்துள்ளார். இந்த விருந்தின்போது மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு மற்றும் அவரது மகன் மஞ்சு விஷ்ணு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மோகன்பாபு இதுவரை மலையாளத்தில் ஒரு படத்தில் கூட நடித்தது இல்லையென்றாலும் மோகன்லாலுடன் நெருங்கிய நட்பில் இருந்து வருபவர். அதேசமயம் மீனாவுடன் ஜோடியாக சில படங்களில் இணைந்து நடித்துள்ளார் மோகன்பாபு.