தயாரிப்பாளர், பெப்சி மோதலுக்கு காரணம் சிம்புதான்: ஆர்.கே.செல்வமணி
ADDED : 1568 days ago
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒரு சிலர் நலனுக்காக தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இது தொடர்பாக ஆர்.கே.செல்வமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவு குறித்த எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை, நான் தன்னிச்சையாக செயல்படுவதாக தவறான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்களை விடவும் நாங்கள் தயாரிப்பாளர் நலனுக்காக பல விஷயங்களை செய்துள்ளோம்.
சிம்பு நடிக்கும் நான்கு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பிரச்னை இருப்பதால் அவர் படங்களுக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டது. அதன்படியே நாங்கள் நடந்து வந்தோம். தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தனது படத்தின் வெளியூர் படப்பிடிப்புக்கு நான்கு நாள் மட்டும் அனுமதி கேட்டார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் அனுமதி தந்த பிறகே அந்த படத்தில் பெப்சி தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.
இரண்டு சங்கங்களுக்கு இடையிலான எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் மீறவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரோ இதனை செய்கிறார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தமிழக முதல்வரை சந்தித்து சுமூகமான தீர்வை பெறுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.