நல்லெண்ணெய் புகழ் நடிகை சித்ரா மாரடைப்பால் திடீர் மரணம் : திரைத்துறையினர், ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை நல்லெண்ணெய் புகழ் சித்ரா(56) திடீர் மாரடைப்பால் அதிகாலை காலமானார். இவரின் மறைவால் திரைத்துறையினர், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
1980களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் சித்ரா. சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலம். தொடர்ந்து சினிமா, சீரியல்களில் நடித்து வந்தவர் ஒரு நல்லெண்ணய் விளம்பரத்தில் நடிக்க அதன்பிறகு நல்லெண்ணய் சித்ராவாகவே அடையாளப்படுத்தப்பட்டார்.
சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்த சித்ரா இன்று(ஆக., 21) அதிகாலை மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 56. அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அவரது வீட்டில் சித்ரா காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கணவர் மகள் உடன் சித்ரா. |
நடிகை சித்ரா தினமும் ஏராளமான பறவைகளுக்கு தண்ணீர், உணவு அளித்து வருவார். தவறாமல் இவரது மொட்டை மாடியில் ஏராளமான காக்கைகள் உணவுக்காக வந்து கரையும். இதற்காகவே பெரும்பாலும் வெளியூர் பயணத்தை தவிர்ப்பாராம்.