சித்ராஞ்சலி 75 கண்காட்சியில் 9 தமிழ்ப் படங்களுக்கு கவுரவம்
ADDED : 1514 days ago
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு விதமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சித்ராஞ்சலி 75 - ஓர் பிளாட்டினம் பனோராமா என்ற பெயரில் விர்ச்சுவல் கண்காட்சி ஒன்றை புனே, தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
இதில் “சினிமா லென்ஸ் வழியே சுதந்திரப் போராட்டம், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குவோம்,” என்ற தலைப்புகளில் 75 படங்களைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்கள்.
“சினிமா லென்ஸ் வழியே சுதந்திரப் போராட்டம்” என்ற தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) படமும், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள், என்ற பெயரில் “கே.சுப்ரமணியம் இயக்கிய சேவா சதன் (1938), தியாக பூமி (1939) படங்களும், சிவாஜி கணேசன் நடித்த அந்த நாள் (1954), எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த நம் நாடு (1969), கமல்ஹாசன், ஷாரூக்கான் நடித்த ஹேராம் (2000) ஆகிய படங்களும், “சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குவோம்“, என்ற தலைப்பில், தாதாமிராஸி இயக்கிய இரத்தத்திலகம் (1963) மணிரத்னம் இயக்கிய ரோஜா (1992)” படமும், ராதா மோகன் இயக்கிய பயணம் (2011) படமும் இடம் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, அசாமிஸ், குஜராத்தி, பஞ்சாபி, ஒடியா, மற்றும் 2 மவுனப் படங்கள் உள்ளிட்ட 75 படங்கள் இடம் பெற்றுள்ளன.