அதே பழைய விக்ரம் தான்; சிலாகிக்கும் பாபு ஆண்டனி
ADDED : 1540 days ago
எண்பது, தொன்னூறுகளில் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் பாபு ஆண்டனி ஆனால் சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் புதிய முகம் காட்டி வருகிறார். அந்தவகையில் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்கா முட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான வரலாற்று படமாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் விக்ரம் தரப்பு நபராக நடித்து வருகிறார். அதனால் விக்ரமுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது குறித்து தற்போது ஒரு புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பாபு ஆண்டனி.
இதுகுறித்து அவர் கூறும்போது, “விக்ரமும் நானும் பல வருடங்களுக்கு முன்பு ஸ்ட்ரீட் என்கிற படத்தில் இணைந்து நடித்து இருந்தோம். அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் இணைந்து நடிக்கிறோம் அப்போது பார்த்த அதே பழைய விக்ரம் தான்.. கொஞ்சம் கூட மாறவில்லை.. படப்பிடிப்பு சமயத்தில் அவருடன் இணைந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினேன். ஆனால் நாங்கள் படத்தில் இடம்பெறும் உடைகளில் இருந்ததால், அப்போதைக்கு அது முடியவில்லை. ஆனால் படப்பிடிப்பு முடிந்ததும், எனது அறைக்கே தேடி வந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் விக்ரம்.. மேலும் என் குழந்தைகள் மனைவி அனைவரையும் நலம் விசாரித்தார். பழைய நினைவுகள் பலவற்றை அந்த சமயத்தில் பேசி மகிழ்ந்தோம்” என்று கூறியுள்ளார் பாபு அண்டனி.