மாமா நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா
ADDED : 1513 days ago
தெலுங்குத் திரையுலகின் முக்கியமான திரைக்குடும்பமான அக்கினேனி குடும்பத்தில் மருமகளாகச் சென்றவர் சென்னையைச் சேர்ந்த நடிகை சமந்தா. நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. நாகார்ஜுனாவுக்கும் அவருடைய முதல் மனைவிக்கும் பிறந்தவர் நாக சைதன்யா. பின்னர் முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு நடிகை அமலாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாகார்ஜுனா.
அதனால், தனது மகன் நாக சைதன்யா கிறிஸ்துவப் பெண்ணான சமந்தாவைக் காதலித்ததற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கோவாவில் மூன்று வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணமும் நடைபெற்றது. இதனிடையே, சமீபத்தில் சமந்தா அவரது சமூக வலைத்தளங்களில் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை நீக்கியிருந்தார். அதிலிருந்தே அவருக்கும் நாக சைதன்யாவுக்கும் பிரச்னை, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி அதிகமாகப் பரவியது.
அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாமனார் நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மருமகள் சமந்தா. “உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இன்றும், எப்போதும், உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நாகார்ஜுனா மாமா,” என வாழ்த்தியுள்ளார்.