தலைவியை காண குழந்தை போல் ஆவலாய் உள்ளேன் - கங்கனா
ADDED : 1490 days ago
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகி உள்ள படம் தலைவி. ஏ.எல். விஜய் இயக்க, ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனாவும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்காக சென்னை வந்திருந்தார் கங்கனா. சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர் தொடர்ந்து எம்ஜிஆர்., கருணாநிதி நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினார்.
தலைவி பிரஸ்மீட்டில் கங்கனா பேசியதாவது : கொரோனா இரண்டாவது அலைக்கு பின் வெளியாகும் படம் இது. இன்னும் நோய் தொற்று குறையவில்லை. இருந்தபோதிலும் நாம் நமது வேலைகளை துவங்க வேண்டி உள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. இந்த படத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொருவரின் வாழ்விலும் நிறைய ஏற்ற, இறக்கங்கள். ஏப்., 23ல் இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தோம். கொரோனா இரண்டாவது அலை வந்துவிட்டது. இந்த முறை தியேட்டருக்கு வருகிறோம்.
நிறைய தடைகளை கடந்து இந்த படம் ரிலீஸை நெருங்கிவிட்டது. நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஒரு குழந்தைபோல் இந்த படத்தை காண, குறிப்பாக தமிழ் பதிப்பை காண ஆவலாய் உள்ளேன். இதுமாதிரியான கதைகளை சித்தரிக்க சரியான நடிகர்களை தேர்வு செய்த இயக்குனர் விஜய்க்கு நன்றி. அரவிந்த்சாமி, சமுத்திரகனி, தம்பி ராமையா, மதுபாலா உள்ளிட்டவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மூன்று மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. அனைத்து மொழிகளிலும் திறமையான கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் பணியாற்றியபோது நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இந்த படத்தின் தரத்தை தனது இசை மூலம் மற்றொரு தளத்திற்கு ஜி.வி.பிரகாஷ் கொண்டு சென்றுள்ளார். என் சினிமா கேரியரில் தலைவி படம் சிறந்த படமாக இருக்கும். எனக்கு இப்படி ஒரு வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு கங்கனா பேசினார்.