பிரபலங்களுக்கு காஞ்சிபுரம் பட்டுச்சேலை பரிசளிக்கும் 'தலைவி'
மறைந்த முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக 'தலைவி' படம் உருவாகியுள்ளது. இப்படம் இந்த வாரம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரமோஷனின் ஒரு பகுதியாக சினிமா பெண் பிரபலங்களுக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவையை பரிசாக வழங்கி வருகிறது படக்குழு.
ஜெயலலிதாவுக்கு, காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால்தான் அழகான காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை பரிசாக அளிக்கிறார்களாம்.
அந்தப் பரிசுடன் அனுப்பப்படும் கடிதத்தில், “பெண்களிடம் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நம்பிக்கையைக் கொண்டாடுவது தான் 'தலைவி'. உங்களது விடாமுயற்சியால் சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய உங்களது நம்பிக்கையை நாங்கள் வணங்குகிறோம். உங்களிடமுள்ள தலைவியைக் கொண்டாடுவோம். நிஜத் தலைவி ஜெயலலிதாவின் அபிமான காஞ்சிபுரம் பட்டுப் புடவையை உங்களுக்கு வழங்க விருப்பப்படுகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.