தனித்தீவு.... 18 போட்டியாளர்கள்... வாழ்வுக்கான போராட்டம்.... சர்வைவர் காண ரெடியா...! - எக்ஸ்குளூசிவ் தகவல்கள்
ADDED : 1491 days ago
உலகளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான ‛சர்வைவர் நிகழ்ச்சி முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செப்., 12 முதல் ஒளிபரப்பாகிறது. கமல், விஜய் சேதுபதி ஆகியோரை தொடர்ந்து நடிகர் அர்ஜூன் முதன் முறையாக இந்நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார்.
சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். தங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு போட்டியில் பல்வேறு விதமான சவால்களும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு யார் இறுதிவரை போட்டியில் உள்ளார்களோ அவர்களே இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
களத்தில் போட்டியாளர்கள் யார் யார்
தமிழில் முதன்முதலாக களமிறங்கி உள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ராந்த், உமாபதி ராமைய்யா, நந்தா, பெசன்ட் ரவி, நடிகைகள் விஜயலட்சுமி, சிருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். இவர்கள் தவிர மேலும் 10 போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் பற்றிய விபரம் சஸ்பென்ஸாக உள்ளது. ஆனால் மொத்தமாக 18 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளர்களான 8 பேரை பற்றி இங்கு பார்க்கலாம்.
விக்ராந்த்
நடிகர் விஜய்யின் உறவினரான விக்ராந்த், ‛‛கற்க கடசற, முதல்கனவே, முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு, நெஞ்சில் துணிவிருந்தால், பக்ரீத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க இவர் போராடி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் தனக்கு திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளார்.
நந்தா
விக்ராந்த் போன்றே நடிகர் நந்தாவும் சினிமாவில் தக்க இடத்தை பிடிக்க போராடி வருகிறார். ‛‛புன்னகை பூவே, கோடம்பாக்கம், ஈரம், வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து குணச்சித்ரம், வில்லன், ஹீரோ என பயணித்து வரும் இவர், இந்த சவாலான நிகழ்ச்சிகளில் களமிறங்கி உள்ளார்.
உமாபதி ராமைய்யா
நடிகரும், இயக்குனருமான தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி. ‛‛அதகாப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது இரு படங்களில் நடித்து வரும் இவரும் கடினமான இந்த நிகழ்ச்சியில் களம் காண்கிறார்.
பெசன்ட் ரவி
தமிழில் ஏகப்பட்ட படங்களில் வில்லனாக நடித்து இருப்பவர் பெசன்ட் ரவி. தற்போது காமெடி கலந்த குணச்சித்ர வேடங்களிலும் நடித்து வரும் இவர் சொந்தமாக ஓட்டலும் ஒன்றும் வைத்துள்ளார். இவரும் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கி சவால்களை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்.
சிருஷ்டி டாங்கே
சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகு நடிகை சிருஷ்டி டாங்கே. ‛‛யுத்தம் செய், மேகா, டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார். தற்போது அவர் நடித்து முடித்துள்ள கட்டில் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சவால்கள் நிறைந்த தனித்தீவில் அடர்ந்த காட்டுக்குள் தன்னாலும் ஜெயிக்க முடியும் என நம்பிக்கையோடு களமிறங்கி உள்ளார்.
விஜயலட்சுமி
இயக்குனர் அகத்தியனின் மகள் என்ற அடையாளம் இருந்தாலும் நடிகையாக ‛‛சென்னை 28, அஞ்சாதே, சென்னை 28-2, கசடதபற போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. ஏற்கனவே பிக்பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர் இந்தமுறை அதிக சவால்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
காயத்ரி ரெட்டி
மாடல் அழகியாக இருந்து சினிமாவில் நுழைந்தவர் காயத்ரி ரெட்டி. முதல் படமே விஜய்யின் பிகில். அந்த படத்தில் விஜய்யின் மகளிர் கால்பந்து அணியில் முக்கிய வேடத்தில் நடித்தார். சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இவர் இந்த நிகழ்ச்சியில் களம் காண்கிறார்.
விஜே பார்வதி
யு-டியூப் சேனல்களில் பல பிரபலங்களை பேட்டி எடுத்து அதன் மூலம் பிரபலமானவர் விஜே பார்வதி. இவரும் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
சர்வைவர் - எக்ஸ்குளூசிவ் தகவல்கள்...
தமிழ் சர்வைவர் நிகழ்ச்சி ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபர் தீவில் நடக்கிறது. ஏற்கனவே படப்பிடிப்புகள் துவங்கிவிட்டன. இந்த நிகழ்ச்சி பற்றிய மேலும் எக்ஸ்குளூசிவ் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு...
* சர்வைவர் நிகழ்ச்சியில் உள்ளூர் போட்டியாளர்கள் 8 பேர் தவிர பல நாடுகளில் வசிக்கும் சர்வதேச போட்டியாளர்கள் சிலரும் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கிறார்கள்.
* வெளிநாடுகளில் எந்த தரத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டதோ அதை தரத்தில் இங்கும் நடைபெறுகிறது. போட்டிக்கான டாஸ்க், மற்ற விஷயங்கள் உள்ளிட்ட எவையும் இங்குள்ள ரசிகர்களுக்காகவும், போட்டியாளர்களுக்காகவும் மாற்றப்படவில்லை.
* ஆணுக்கு பெண் சமம் என்பது இந்த காலம். அதனால் இந்த போட்டியில் எந்த பாகுபாடும் இல்லை. ஆண்களுக்கு நிகராக பெண்களும் இந்த போட்டியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
* இந்த நிகழ்ச்சியின் நிகழ்ச்சியின் மற்றொரு தனித்துவமான சிறப்பு அம்சம் என்னவென்றால் ரசிகர்கள் யாரும் ஓட்டு போட போவதில்லை. போட்டியாளர்களே ஒன்றாக இணைந்து வாக்களிக்கப்பார்கள். போட்டியாளர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது எப்படிப்பட்ட சூழல் என்பதை அவர்கள் அறிவர், அதற்கு ஏற்றபடி அவர்களே இந்தவாரம் யாருக்கு ஓட்டளிக்கலாம் என்பதை முடிவு செய்வார்கள். இந்த ஒரு விஷயம் பார்வையாளர்களுக்கு இன்னும் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
* செப்., 12 முதல் நிகழ்ச்சி துவங்க இருப்பதால் போட்டிக்கான ஆரம்பம் துவங்கிவிட்டது. தனித்தீவில் தற்போது சரியான வானிலை இல்லை. இருந்தபோதிலும் போட்டியாளர்கள் பட்டத்தை வெல்ல தங்களால் முடிந்தவரை போராட துவங்கிவிட்டனர்.
* பிற ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் ஒரு வீடு போன்ற சூழலில் தான் படமாக்கப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி அப்படியல்ல, முழுக்க முழுக்க தனித்தீவில் காட்டில் படமாகிறது. இதனால் போட்டியாளர்கள் தாங்கள் வாழ்ந்த சொகுசு வாழ்க்கையை இங்கு வாழ முடியாது. வெயில், மழை உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் எதிர் கொள்ள வேண்டும். வானிலை பொறுத்து போட்டியாளர்கள் தங்களின் அடிப்படை தேவையான உணவு, தங்குமிடம் உள்ளிட்டவைகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பத்தில் சிரமப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் வெற்றி ஒன்றே இலக்கு என்பதை முன்வைத்து, சக போட்டியாளர்கள் மற்றும் விடாமுயற்சி உடன் அங்கு உயிர்வாழ சிறந்த வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.
செப்., 12 முதல் ஜீ தமிழ் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி, நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
என்ன ரசிகர்களே சர்வைவர் காண நீங்க ரெடியா...!